ரஜினி மட்டுமல்ல யார் திமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம் – கே.பி.ராமலிங்கம்

First Published Jun 3, 2017, 9:47 AM IST
Highlights
Not only Rajini who will come to the DMK will accept - KP Ramalingam


நாமக்கல்

ரஜினி திமுகவிற்கு வந்தால் வரவேற்போம், அதேபோல யார் திமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம் என்று தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் மருத்துவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் முன்னாள் எம்.பியும், தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளருமான மருத்துவர் கே.பி.ராமலிங்கம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு காலை உணவும், தி.மு.க.வினருக்கு இனிப்பும் வழங்கினார்.

பின்னர் மருத்துவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

“தமிழகத்தில் அரசியல் கட்சியினர் ஆட்சி இல்லாமல் அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது. இதனால் தவறுகள் அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பயந்து கொண்டு இருக்கிறார்களே தவிர, அதிகாரிகள் பயப்படாமல் தவறுகளை செய்கிறார்கள்.

அதிகாரம் இல்லாத முதலமைச்சராக, அதிகாரம் இல்லாத ஆட்சியாக இருக்கிற காரணத்தால் முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய அந்தஸ்தை கூட அவருக்கு வழங்காமல், அதிகாரிகள் ஆட்சியை தங்கள் கையில் வைத்துள்ளனர்.

மத்திய அரசு மூன்று ஆண்டு கால ஆட்சியை நிறைவுச் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் அதிக ஆதரவு உள்ளது என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா உள்பட இந்தி பேசாத அனைத்து மாநில மக்களையும் பாதிக்கும் வகையில் அவர்களது ஆட்சி சென்று கொண்ரிருக்கிறது. இந்த செயலால் பா.ஜ.க. அரசிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டின் கீழ் மத்திய பா.ஜனதா அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியை கொள்கை ரீதியாக பாராட்ட முடியாது.

மாட்டு இறைச்சி விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பசுக்களும், மாடுகளும் விவசாயிகளின் மூலதனம் என்பதை உணர்ந்து இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

தி.மு.க. என்பது பெரிய கட்சி. அதில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

ரஜினி தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம். அதேபோல் யார் தி.மு.க.வுக்கு வந்தாலும் வரவேற்கப்படுவார்கள்” என்று மருத்துவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

click me!