
இந்தியா முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தை இன்சாட் 3டி செயற்கைக்கோள் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விரைவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
மழை வருமா..வருமா என பொது மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்சாட் 3டி செயற்கை கோள் அனுப்பியுள்ள புகைப்படம் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்சாட்3டி என்ற வானிலை செயற்கைகோளை இஸ்ரோ ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவியுள்ளது. இந்த செயற்கை கோள் காலநிலை குறித்த தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த இன்சாட் 3டி செயற்கைக்கோள் அனுப்பியுள்ள புகைப்படத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்ததை அடிப்படையாக கொண்டு, இஸ்ரோ புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இமயமலைத் தொடர்களில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் வட மாநிலங்களில் விரைவில் மழையை வரவழைக்கும் சூழல் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவைப் பொருத்தவரை வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதிகளில் மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.