
காளீஸ்வரி குழும நிறுவனங்களில் இன்கம் டேக்ஸ் ரெய்டு… வருமான வரி செலுத்துவதில் முறைகேடு புகார் எதிரொலி..
காளீஸ்வரி குழும நிறுனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 54 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது
காளீஸ்வரி குழும நிறுவனங்கள் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றன. சென்னை, மதுரை உட்பட இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இன்று அதிகாலை புகுந்த வருமான வரித்துறை அதகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வருடமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அதிகாரிகள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முறையாக வருமான வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து காளீஸ்வரி குழும நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் 100 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு , காஞ்சிபுரம் வேங்கைவாசலில் உள்ள தொழிற்சாலை மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.