
அரியலூர்
அரியலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழக அரசின் முதன்மை செயலர் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், உரம் மற்றும் மும்முனை மின்சாரம் போன்றவை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
அரியலூர் ஆட்சியரகத்தில் குடிநீர் வழங்கல், விவசாய இடுபொருள் மானியம் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் ஒன்று நடைபெற்றது.
இதில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மைச் செயலரும், மாவட்டக் காண்காணிப்பு அலுவலரும் தமிழக அரசின் முதன்மை செயலருமான பனிந்திர ரெட்டி தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பனிந்திர ரெட்டி பேசியது:
“மாவட்டத்தில் நகர், கிராமப்புறப் பகுதிகளில் தினசரி தேவையான குடிநீர் மக்களுக்கு கிடைத்திடும் வகையில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள், பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுதல் மற்றும் ஏரி, குளங்கள் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட வறட்சி நிவாரண பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரொக்கமாக பயிர்க் கடன், உரம் மற்றும் மும்முனை மின்சாரம் போன்றவை தடையில்லாமல் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் எம்.பி.ம.சந்திரகாசி, செயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜே.கே.என். ராமஜெயலிங்கம், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.