
திருவள்ளூர்
திருவள்ளூரில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் கொட்டோ கொட்டுனு பெய்த கன மழையாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு செல்வதில் பெற்றொர்களுக்கு, பெரும் சிரமம் ஏற்பட்டது.
திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. ஆனால், நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய மழை மதியம் 2 மணி வரை பெய்தது.
காற்று, இடி, மின்னல் ஏதுமின்றி சுமார் எட்டு மணி நேரம் விடாது மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களைக் கொண்டு விட பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அதேபோன்று பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உலக நாத நாராயணசாமி அரசு கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். அத்துடன் தொடர் மழை காரணமாக வீடுகளுக்கு பால் மற்றும் பேப்பர் விநியோகம் செய்யும் தொழில் செய்வோர் பெரிதும் அவதிப்பட்டனர்.
தொடர், மழையால் தாயுமான் செட்டி தெரு, அரிஅரன் பஜார் சாலை, தேரடி இரயில்வே மேம்பாலம் கீழ், வட்டாட்சியர் அலுவலகச் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
பொன்னேரி பகுதியில் 8 மணி நேரம் பெய்த தொடர் மழையால், அங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம், ஆரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.
மழை காரணமாக பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது.