
திருப்பூர்
திருப்பூரில் கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்திய பின்பும் சொத்துப் பத்திரத்தை திருப்பி தராமல் வேறொருவர் பெயரில் கிரயம் செய்துவிட்டு ஏமாற்றும் கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மக்களை கடும் சோதனை செய்தபிறகே உள்ளே அனுமதித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்த ஏராளமான மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் கந்துவட்டி தொடர்பாக அவினாசி பிரிவு காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த பாலாமணி (54) என்பவர் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில், “கடந்த 2010–ஆம் ஆண்டு ராசப்பன் என்பவரிடம் எனது வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து ரூ.1 இலட்சம் வாங்கினேன். பின்னர் 2011-ஆம் ஆண்டில் வட்டியும் சேர்த்து ரூ.3 இலட்சம் கொடுத்துள்ளேன். ஆனால், வீட்டு பத்திரத்தை இதுவரை திருப்பி கொடுக்கவில்லை.
அதுகுறித்து விசாரித்தபோதுதான் வீட்டுபத்திரத்தை ராசப்பன் பெயரில் கிரையம் செய்தது தெரியவந்தது. ரூ.8 இலட்சம் கொடுத்தால்தான் பத்திரத்தை திருப்பித் தருவேன் என்று ராசப்பன் கூறினார்.
பின்னர் இதுபற்றி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு நடவடிக்கை எடுக்காததால் ஆணையரிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவு மையத்திலும் புகார் கொடுத்துள்ளேன். எனவே, இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.
அதேபோன்று, ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராதாமணி மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “குன்னத்தூர்ரோடு மகாகணபதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் கடந்த 1995–ல் குடும்ப தேவைக்காக கணேசமூர்த்தி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.12 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு பல தவணைகளில் ரூ.6000 செலுத்தியுள்ளார்.
ஆனால் கடந்த 1999–ஆம் ஆண்டு எனது சொத்தை பொன்னுசாமி என்பவருக்கு கிரயம் செய்தது தெரியவந்தது. இதை கேட்டதற்கு மேலும் ரூ.5 இலட்சம் கொடுத்தால் கிரயத்தை ரத்து செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, கந்துவட்டி கேட்டு ஆள்மாறாட்டம் செய்து எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்து பத்திரத்தை மீட்டு தர வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.
மற்றொரு கந்துவட்டிக்கு எதிரான மனுவை கிடாதுரைபுதூர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் கொடுத்தார். இவர் விசைத்தறி குடோன் வைத்துக்கொண்டு கூலிக்கு நெசவு செய்து வருகிறார்.
அந்த மனுவில், “தொழிலை மேம்படுத்துவதற்காக ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் என்பவரிடம் சொத்து பத்திரத்தை அடகு வைத்து ரூ.8 இலட்சத்து 80 ஆயிரம் கடனாக வாங்கினேண். இதற்கு பல தவணைகளில் ரூ.15 இலட்சத்து 20 ஆயிரம் செலுத்தியுள்ளேன்.
பின்னர் பத்திரத்தை திருப்பிக் கேட்ட போது மேலும் ரூ.16 இலட்சம் கொடுத்தால்தான் பத்திரத்தை கொடுப்பேன் என்று செந்தில்குமார் கூறியுள்ளார். பின்னர் நாங்கள் கொடுத்த பத்திரத்தை அவரது மனைவி ஹேமலதா பெயரில் கிரயம் செய்துள்ளார்.
இதை கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்து பத்திரத்தை மீட்டு தர வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.
இப்படி ஒரே நாளில் மூன்றுபேர் கந்துவட்டிக்கு எதிராக மனுக்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.