
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இருக்கும் விசைப்படகுகளில் அதிக திறன் கொண்ட இயந்திரங்களையும், சீன இயந்திரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் ஆட்சியரிடத்தின் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சமுதாய சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “மீன்வளத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப் படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் நீளம் இருந்தால் அதை குறைக்க வேண்டும்.
அதிக திறன் கொண்ட இயந்திரங்களையும், சீன இயந்திரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
விசைப்படகுகள் காலை 5 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும்.
கரையில் இருந்து 5 கடல் மைல்கள் தாண்டியே மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
மீன்பிடி துறைமுகத்தில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
பதிவு செய்யப்படாத விசைப் படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கும்போது, மீனவர்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்” என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.