
நாளை ஒரு நாளைக்கு மட்டும் மழை சற்று குறைவாக காணப்படும் என்றும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் முழுவதும் மழை பின்னி எடுக்கப்போவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகத்தின் அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை ஒரு நாள் மட்டும் மழை சற்று குறைந்து காணப்படும் என்றும் அதன் பிறகு மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 1-ந் தேதிக்கு பிறகு 3 நாட்களுக்கு கனமழை மழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும என்றும் பிற மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையை அடுத்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.