
திருவாரூர்
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூரில் விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், காட்டூர் ஊராட்சியில் “நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
தனி நபர் கழிவறை திட்டம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவி்க்கப்பட்டது.
அதன்படி, நேற்று திருவாரூர் அருகே காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மணியன் தலைமை வகித்தார்.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கலைமணி, விவசாயச் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயபால், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் தம்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொரடாச்சேரி துணை வட்டார வளர்்ச்சி அலுவலர் வசந்தன், தாலுகா காவலாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விவசாய தொழிலாளர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.