
திருப்பூர்
கடன் தொகையை செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு கட்டாய வசூலில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துசாமியிடம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றைக் கொடுத்தனர். இவர்களுக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.கே.டி.பொன்னுசாமி தலைமைத் தாங்கினார்.
பின்னர் அச்சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விவசாயிகளின் குடும்பங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
பயிர்களைக் காக்க வேண்டி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் விவசாயிகள் கடன் பெறுகின்றனர். கடந்தாண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆனாலும் கடன் தொகையை செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செல்கின்றன.
விவசாயிகள் வறட்சியில் இருந்து மீண்டு வரும் நிலையில் கட்டாய கடன் நிலுவை வசூலில் ஈடுபட்டு அவர்களைத் தற்கொலைக்கு தூண்டும் வகையில் இந்த நடவடிக்கைகள் உள்ளன.
எனவே, கட்டாய வசூலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.