தமிழகத்தில் அண்மையில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சாமானியர்கள் பயன்படுத்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் திருநெல்வேலியில் இருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஆனால், வந்தே பாரத் ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் வேகமாக இலக்கை சென்றடையும் என்று காட்டுவதற்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D