
தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்காததால் தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பொங்கல் பண்டிகை (ஜனவரி 15) அன்று விசாரணைக்கு வர உள்ளது. விஜய்யின் கடைசி படத்தை முடக்கும் மத்திய பாஜக அரசை திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட பலர் விமர்சித்தனர்.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் விஜய்க்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டியது. தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதேபோல் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், ''ஜனநாயகன்' திரைப்படத்தைத் தடுக்கும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி'' என்று தெரிவித்து இருந்தார்.
விஜய்யுடன் கைகோர்க்கவே ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசி வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான பிரவீன் சக்கரவர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட் போட்டுள்ளார். இது தவெக காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
ராகுல் காந்தி ஆதரவு கொடுத்தது ஏன்?
இதற்கு பதில் அளித்த பிரவீன் சக்கரவர்த்தி, ''ஜனநாயகன் குறித்து ராகுல் காந்தி கருத்து சொன்னதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு சிபிஐ, வருமான வரித்துறை போன்று தணிக்கை வாரியத்தையும் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாவது என்பது ஒரு கலாசாரம் போன்றது. இதை வைத்து தான் ராகுல் காந்தி ஜனநாயகன் குறித்து பேசியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.