
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பெண்கள் அறுவடை செய்துக் கொண்டிருந்த தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் மலைப்பகுதிக்குள் கொண்டுச் சென்றுவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரஸ்வதி. இவர் அதேப் பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் சுரஸ்வதி உள்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயிர்களுக்கு இடையே பழுப்பு நிறத்தில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதை பார்த்தனர். அதனை முயல் என நினைத்து இரண்டு பெண்கள் பிடித்தனர். அப்போதுதான் அது பத்து அடி நீள மலைப்பாம்பு என்று.
பின்னர், இதுகுறித்து வத்தலகுண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்னையடுத்து அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து அந்த மலைப் பாம்பை பிடித்தனர்.
அப்போது ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணைக்குள் புகுந்து மூன்று கோழிகளை அந்த மலைப் பாம்பு விழுங்கி இருப்பது தெரிந்தது.
பின்னர், வத்தலகுண்டு வனச்சரகர் செந்தில்குமாரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்பை கோபால்சாமி கோயில் கரட்டில் விடுவதற்கு வனத்துறையினர் முடிவு எடுத்தனர்.
ஆனால், அது குழந்தைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பாம்பை விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வனக்காப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள், வத்தலகுண்டு சரகத்துக்கு உள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அதனைக் கொண்டுச்சென்று விட்டனர்.