
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 19 ஆம் தேதி 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறையை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மட்டும் பொதுவிடுமுறைக்கு பொருந்தாது என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.