சினிமாவில் இறங்குறார் ஓ.பி.எஸ். மகன்!? உதயநிதிக்கு போட்டியா ரவீந்திரநாத் எம்.பி.?

Published : Feb 09, 2022, 07:04 PM IST
சினிமாவில் இறங்குறார் ஓ.பி.எஸ். மகன்!? உதயநிதிக்கு போட்டியா ரவீந்திரநாத் எம்.பி.?

சுருக்கம்

ரவீந்திரநாத் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போவதாக அ.தி.மு.க.வினுள் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதைப் பரப்புபவர்களே தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் தானாம்

இப்படி அப்படி இல்லாத பிஸியிலும், வெறித்தனமான களப்பணியிலும் இருக்கிறது அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் பெற்ற தோல்வியை கொஞ்சமேனும் இந்த உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டியே ஆகணும்! என்பதே அவர்களின் ஒரே டார்கெட். அதற்காக வேட்பாளர் தேர்வில் துவங்கி, பிரசாரம் வரை வெறித்தனம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இறுக்கமான சூழலில், அவர்களை ரிலாக்ஸ்ட் செய்ய வைத்து, கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறது ஒரு செய்தி. அது, ‘ரவீந்திரநாத் எம்.பி. சினிமாவில் நடிக்கப்போறாராம்.’ என்பதே. அதாவது அ.தி.மு.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதியின் எம்.பி.யுமான ரவீந்திரநாத் சினிமாவில் ஹீரோவாக வேஷம் கட்டப்போகிறார்! என்று கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வினுள் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதைப் பரப்புபவர்களே தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் தான்.

அவர்களிடம் இது பற்றி விசாரித்தால்… “உண்மைதானப்பே, ரவிக்கு என்னா குறைச்சல கண்டுட்டீக! எவன் எவனெல்லாமோ சினிமாவுல ஹீரோவா வேஷம் கட்டுறேம். இவுகளுக்கு என்ன கொற? ஆளு நல்லா ஓங்குதாங்கா, ஹைட்டும் வெயிட்டுமா இருக்காரு. களையான மூஞ்சிதேம். என்னா ஒண்ணு கொஞ்சம் கருப்பு, அம்புட்டுதேம். ஆனா தமிழ்நாட்டுல கருத்த ஹீரோக்கள்தான் உச்சம் தொட்டிருக்காவ.”

ரஜினி கருப்புதேம், விசயகாந்து கருப்புதேம், முரளி கருப்புதேம், விஜய் சேதுபதி கருப்புதேம், பார்த்திபன் கருப்புதேம். அட, இப்ப நல்லா வளந்து நிக்குற பையன் சிவகார்த்தி கூட கருப்புதேம் ஆனா இன்னைக்கு வேணா அவன் சிவப்பா தெரியலாம். வேணும்னா அந்தப் பையனையே ஒரு வார்த்த கேட்டுப்பாருங்க.

ஆனா நம்மாளு இப்பவே கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு நிறம்லா. கொட்டிக் கெடக்கு பணம், அது போக டெல்லி வரைக்கும் அதிகாரமிருக்குது, அப்புறம் என்ன ஆக்ட் கொடுத்து அசத்திப்புட வேண்டிதேம். அதாவது சின்னவருக்கு (ரவீந்திரநாத்) நெடுநாளா சினிமவுல நடிக்கிற ஆச அவரு மனசுக்குள்ள கெடந்து தவிச்சுட்டு கெடக்குது. இங்குட்டு நம்ம தேனி பக்கம் நிறைய ஷூட்டிங் எடுப்பாக. பல படங்கள இவுக தோட்டத்துலேயே எடுப்பாக. அப்பம் மரியாத நிமித்தமா சின்னவர பார்க்க வர்ற டைரக்டருக, நடிகருங்க, நடிகைங்க இவரைப் பார்த்து ‘நீங்களே சூப்பரா இருக்கீக. நடிச்சா என்னவாம்?’ன்னு கேப்பாக. அப்படித்தேம் நம்மாளுக்குள்ளே  நடிப்பு ரசன வளர்ந்துச்சு.

அது இப்ப நேரங்காலம் கூடி  வந்து நிக்குது. தேர்தல் பரபரப்பு முடிஞ்சதும் நடிக்கிறதுக்கு தயாராவாப்லன்னு தெரியுது. கதயெல்லாம் கேட்டுட்டாப்டியாம். இவரே தயாரிப்பார் போல தெரியுது.

இந்த விவரத்த பெரியவர் (ஓ.பி.எஸ்.) காதுல போட்டப்ப, அவரு சிரிச்சுக்கிட்டே ‘கட்சி மேலே கவனத்த விட்டுடாத தம்பி’ன்னு சொல்லிட்டாப்டி. அப்படின்னா என்ன அர்த்தம்? நடி ஆனாலும் அரசியலை ஒரு இம்மியளவும் விட்டுடுடாதே!ன்னு அர்த்தம். இது போதாதா? நம்மாளு கூடிய சீக்கிரம் ஹீரோ வேஷம் கட்டுறத நாங்க சுத்தி நின்னு வேடிக்க பார்க்கதேம் போறோம்.

ஆளுங்கட்சியில ஒரு வாரிசு எம்.எல்.ஏ. நடிக்கிறப்ப, எங்க கட்சியில ஒரு வாரிசு எம்.பி. நடிக்கப்டாதா?” என்கிறார்கள்.

சர்தேம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!