
நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் பட்டியலை வரும் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த பின்னர் நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தான், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நகைக்கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதும் அம்பலமானது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த சூழலில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. துணை பதிவாளர் தலைமையில் செயல்படும் இந்த குழு தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நபர்களை அடையாளம் கண்டு பட்டியலை அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. பின்னர் இந்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதிவாளர் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் தகுதி உள்ள மற்றும் தகுதியற்ற நபர்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட இந்தக் குழு சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பட்டியலை தயார் செய்து வழங்க வேண்டும். ஒரே ரேஷன் அட்டை அல்லது ஒரே ஆதார் எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் குறித்தும் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும். தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மீது சந்தேகம் ஏதேனும் இருந்தால் அவர்களை தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணங்களையும் குறிப்பிட வேண்டும். வரும் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.