வரலாறு காணாத போக்குவரத்து பாதிப்பு!!! - பொதுமக்கள் கடும் அவதி

First Published May 15, 2017, 9:33 AM IST
Highlights
public affected due to bus strike


போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். 

எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் தொடங்கியது. தமிழகம் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பேருந்து இல்லாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். 

பெரம்பலூர் பணிமனையில் 110-பேருந்துகளில் ஒரு பேருந்து கூட இதுவரை இயக்கப்படவில்லை; திருச்சி மாவட்டத்தில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலையில் பேருந்து ஸ்டிரைக்கால் தனியார் பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டம் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரூ.250 வரை வசூலிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

கடலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்ல மினி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பதை அடுத்து இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதி முறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை மினிபஸ்சில் ஏற்றுவதாக புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

திருவாரூர் பணிமனையில் இருந்து 15 % பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருவாரூரில் 250 அரசுப் பேருந்துகளில் 35 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 23 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சென்னையில் அண்ணா நகர், போரூர், ஓட்டேரி, குரோம் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. 

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. 8 நாட்களுக்கு பின்னர் மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் 7ம் தேதி முதல் ரயில் சேவை ரத்தானது குறிப்பிடத்தக்கது.  

போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

களியக்காவிளை வரை மட்டுமே கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக ஊர்களுக்கு கேரள அரசுப் பேருந்து குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் உப்பளம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசுப் பேருந்து, தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறுபகுதிகளில் பொதுமக்கள், வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கிற்க்கு ஆளாகியுள்ளனர்.

click me!