
திருச்சி
திருச்சியில், விசிகவின் கொடி, கயிறு, கொடிக்கம்பம் என அனைத்தையும் பிளான் போட்டு அப்புறப்படுத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் அருகே பெரியநாயகி சத்திரம் என்கிற சத்திரப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை வைத்திருந்தனர். இந்தக் கொடிக்கம்பத்தை கடந்த மாதம் யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் கொடிக்கம்பத்தில் இருந்த கயிறு, கொடி உள்ளிட்டவை அகற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அந்த கொடிக்கம்பமும் முற்றிலும் அகற்றப்பட்டிருந்தது. இதனால் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் கொடிக்கம்பத்தைத் தேடியபோது அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதியில் அது கிடந்தது. இதனால் கோபமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சத்திரப்பட்டியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் சாலையில் கட்சியின் திருவரங்கம் தொகுதி செயலாளர் பொன்.முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் கண்ணன், பூபதி உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் ஆய்வாளர் (பொறுப்பு) பிரபாகரன் தலைமையிலான காவலாளர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கொடிக்கம்பத்தை அகற்றியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.