
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உள்பட பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நெடுவாசல் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம், முன்னறிவிப்பு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலை சேர்ந்த ராஜேந்திரன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
‘‘நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஜூலை 15ல் (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி,‘‘போராட்டம் என்பது அங்குள்ள பிரச்சனையை வெளிப்படுத்துவதற்காக நடக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. ஜனநாயக நாட்டில் போராட உரிமை உள்ளது என கூறி, காவல்துறை அனுமதியளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. அதன்பேரில் இன்று தடிகொண்ட அய்யனார் கோயில் திடலில் மதியம் 2 மணி முதல் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துககு மாலை 5 மணி வரை அனுமதி வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் அய்யனார் திடலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈட்டுள்ளனர்.