அரசு அதிகாரிகளைக் கண்டித்து விழுப்புரத்தின் 13 தாலுகா அலுவலகங்களில் இன்று தர்ணா போராட்டம் - கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு...

First Published Jan 8, 2018, 10:16 AM IST
Highlights
protest in Villupuram 13 Taluk offices condemned by government officials


விழுப்புரம்

அரசு அதிகாரிகளை கண்டித்து விழுப்புரத்தின் 13 தாலுகா அலுவலகங்கள் முன்பு இன்று மாலை 6 மணி முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க விழுப்புரம் மாவட்டச் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை வகித்தார். இணை செயலாளர் பொன்.கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் புஷ்பகாந்தன், முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் பரமானந்தம் ஆகியோர் பங்கேற்று சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.

இக்கூட்டத்தில், "மாவட்ட மாறுதலுக்கான உத்தரவு வழங்க வேண்டும்,

உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும்,

கூடுதல் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும்,

இணையதள சான்றிதழ் வழங்குவதற்கு ஆகும் செலவின தொகையை உடனே வழங்க வேண்டும்" ஆகிய நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டபோதிலும் அதனை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருப்பதை கண்டித்தும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா அலுவலகங்களிலும் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர தர்ணா போராட்டம் நடத்துவது,

10–ஆம் தேதி (புதன்கிழமை) விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம், 18–ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட துணைத்தலைவர் பெரியதமிழன், பொருளாளர் சிவக்குமார், அமைப்பு செயலாளர் இந்திரகுமார் உள்பட 13 வட்ட பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி வட்ட தலைவர் மணிபாலன் நன்றித் தெரிவித்தார்.

click me!