
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 8 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. விதிமுறைகள் என்ற பெயரில் மாணாக்கர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்கள் சட்டையை கிழித்தும், பலர் புதிய சட்டைகளை வாங்கி பின்னர் தேர்வு எழுதியதும் கண் கூட பார்க்க முடிந்தது.
இவை எல்லாவற்றையும் விட கேரள மாநிலம் கண்ணூரில் மாணவிகள் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்றச் சொல்லி அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்று மத்திய அரசு மார்தட்டிய நிலையில், பீகாரில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானது.
இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 8 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலக்கு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.