
ஒயின் ஷாப் திறந்தால் தற்கொலை பண்ணிக்குவோம்….மின் கோபுரம் மீது ஏறி பெண்கள் மிரட்டல்…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மின்கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் குருந்தணி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் கடையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்ததால் . கிராம மக்கள், கடை அருகே திரண்டனர். மேலும், அங்கிருந்த உயர்மின் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர். மதுக்கடை அமைக்க மாட்டோம் என உறுதி அளித்தால்தான் கோபுரத்தை விட்டு இறங்குவோம் என தெரிவித்தனர். இல்லை என்றால் அங்கிருந்து குதித்து உயிரை விடப்போவதாக மிரட்டல் விடுத்தனர்
அப்போது அங்கு வந்த மின் வாரிய உயர்அதிகாரிகள் அந்த பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . இதன் பிறகு அந்த பெண்கள் மின்கோபுரங்களில் இருந்து கீழிறங்கி வந்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதே போன்று வேலூர் மாவட்டம் சின்ன பேராம்பட்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடை பூட்டை உடைத்த பொது மக்கள் அங்கிருந்த மது பாட்டில்களை உடைத்து தூக்கி எறிந்தனர்.
நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் கிராமத்தில் மதுக் கடை திறப்பதை எதிர்த்து பெண்கள் வாட்டர் டேங்க் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் அண்ணா பேட்டையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.