
நீலகிரி
நீர்வரத்து குறைந்ததாலும், கோடைகாலத்தில் தண்ணீர் தேவைக்காகவும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை மீண்டும் குறைத்துள்ளனர் அலுவலர்கள்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரும் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணைதான்.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில நாள்களுக்கு முன்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையில் நேற்றைய நீர்மட்டம் 110 அடியாகவும், நீர்வரத்து 67 கன அடியாகவும் இருக்கிறது. அணையின் நீர் இருப்பு 911 மில்லியன் கன அடியாக இருந்தது.
ஒருபக்கம், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் கோடைகால குடிநீர் தட்டுப்பாடு. இவற்றை சரிசெய்ய திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க அலுவலர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 100 கன அடியிலிருந்து 67 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது.