
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி, சென்னை சேப்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி, வாழ்வுரிமைக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் போர் நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் அதே ஆண்டு மே 17 ஆம் தேதி லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. இதன் நினைவாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தின்போது லட்சக்கணக்கான பேர் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை காவல்துறை திணறியது. கடைசியாக காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதையடுத்து, மெரினாவில் கூட்டம் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்தது. அரசியல் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து தடையைத் திரும்பப்பெற்றது காவல்துறை. மேலும், கூட்டமாக மெரினாவில் நிற்கக்கூடாது என்று தடை விதித்தது.
இந்நிலையில், மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாககூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 2000 பேர் பேரணியாக சென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.