
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரைக் கண்டித்து, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் சாலையின் குறுக்கே வேன்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினரின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, பெரம்பலூரைச் சேர்ந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள வேன் ஓட்டுனர்களை அணுகி, சென்னைக்கு செல்வதற்காக முடிவு செய்திருந்தனர்.
இதனையறிந்த பெரம்பலூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன், சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர்களை திங்கள்கிழமை இரவு அணுகி சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்லக் கூடாது என்று எச்சரித்திருந்தார். மேலும், இரண்டு ஓட்டுநர்களிடம் இருந்து வேன் சாவிகளையும் பறித்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை காலை தகவலறிந்த வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், துணை கண்காணிப்பாளரின் செயலைக் கண்டித்து தங்களது வேன்களை புறநகர் பேருந்து நிலையம் எதிரே, சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான காவலாளர்கள் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இதில், ஓட்டுநர்களிடம் இருந்து பறித்துச்சென்ற வேன் சாவிகளை உடனடியாகத் திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டத்தால் புறநகர் பேருந்து நிலைய வளாக சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.