
நீலகிரி
அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா திருமதுரை ஊராட்சி மண்வயல் தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம், ஆர்.டி.ஓ. முருகையன், மகளிர் திட்ட அலுவலர் மரு.ஜெயராமன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியது: "திருமதுரை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதிக விழிப்புணர்வு உள்ளது. ஊராட்சி மூலம் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை என கூறி கிராமசபை கூட்டங்களை கடந்த காலங்களில் புறக்கணித்தனர்.
அரசு அலுவலர்கள் மக்கள் சேவை ஆற்றவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பணிகளில் தவறுகள், குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வரவேண்டும். ஆய்வு நடத்தி குறைபாடு இருப்பது தெரியவந்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
2017-2018-ஆம் ஆண்டில் 13 பசுமை வீடுகளும், பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 இலட்சமும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.25 இலட்சமும், பொதுநிதியில் இருந்து ரூ.7 இலட்சமும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 20 வீடுகளும், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் இனிவரும் காலங்களில் 18 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் தங்களுடைய கிராமங்களுக்கு என்ன தேவையோ அதை மக்கள் அதிகாரிகளிடம் கேட்டு பெற வேண்டும்.
அங்கன்வாடி, பள்ளிக்கூடம் உள்ள இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டவும், நடைபாதை, சாலை வசதி செய்து தருவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படும். வளர்ச்சி பணிகள் நடைபெறும் கிராமங்களில் பணிகள் பற்றிய முழு விவரத்தை அறிவிப்பு பலகையாக பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களும் பணிகள் பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
வட்ட முண்டா, குனில், கோழிக்கண்டி, ஈச்சம்வயல், ஓடக்கொல்லி, அம்பலக்கொல்லி, கீச்சலூர் உள்பட பல பகுதிகளில் சாலை அமைக்கப்பட உள்ளது. திறந்த வெளியில் மலம் கழிப்பது இல்லாத மாவட்டமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இத்தொகை வழங்கப்படுவது மிக விரைவில் நிறுத்தப்பட உள்ளது. எனவே, மக்கள் தங்களது வீடுகளில் கழிப்பறை கட்டிக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழித்தால் சுகாதார பாதிப்பு உண்டாகி நோய் பரவுகிறது. இதனால் அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வீடுகளில் கண்டிப்பாக கழிப்பறை கட்ட வேண்டும்.
ஜென்மம் நிலத்தில் ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிய வீடுகள் தேவைப்படுபவர்கள் அதிகாரிகளிடம் முறையாக மனுக்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் பேசினார்.
இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பேருக்கு இஸ்திரி பெட்டியும், முதியோர் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணையை 14 பேருக்கும், 153 பேருக்கு பட்டாவும், ஆதிவாசி மக்கள் 47 பேருக்கு சாதி சான்றிதழ்களும் என மொத்தம் 217 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மக்களிடம் மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.