
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி 35 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 31ம் தேதி அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
சொத்து வரி மீண்டும் உயர்வா?
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஒன்றிய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கூறுவது என்ன?
இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.