
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல நாளை முதல் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றின் வேகமும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று மட்டும் 1,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,49,534 பேராக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 611 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,04, 410 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,784 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை தடுக்கும் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல நாளை முதல் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்களுக்கு மணற்பரப்பில் அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.