அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பா.? உண்மை என்ன.? வெளியான விளக்கம்

Published : Jan 02, 2025, 09:00 AM IST
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பா.? உண்மை என்ன.? வெளியான விளக்கம்

சுருக்கம்

 தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க இருப்பதாக வெளியான நிலையில் தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்கும் அரசு பள்ளிகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்வில் போட்டி போட்டு மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து தனியார், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணைந்து தனியார் பள்ளிகள் சங்கத்தை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகள் சார்பாக கல்வி சார்ந்த உதவி பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்க இருப்பதாக  தகவல் வெளியானது. இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. 

அரசு பள்ளிகளுக்கு உதவி

இந்த நிலையில் இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள், பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், 

கல்வி உபகரணங்கள் உதவி

கணிணி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் அந்த கூட்டத்தில் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொச்சைப்படுத்துவதா.?

எனவே இந்த கூட்டத்தில் சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு CSR மூலம் உதவ தயாராக உள்ளோம் என்று சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய அந்தப் பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த இடத்திலும் தத்தெடுக்கப்படும் என்ற வார்த்தை யாராலும் உபயோகப்படுத்தப்படவில்லை. அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் CSR மூலம் பங்களிப்பார்கள் உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டதே தவிர தத்தெடுக்கும் என்ற வார்த்தை இல்லை என்பதை இந்த நேரத்திலே தெளிவுபடுத்திக் கொள்கிறோம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!