
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவனை ஆசிரியர் ஒருவர் திட்டியதாகவும், பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வருமாறு மாணவனை வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மாணவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த மாணவன் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் திட்டியதால் தான் மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள் மாணவனின் உடலை வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவனின் இந்த விபரீத முடிவுக்கு காரணமான ஆசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.