
திருவள்ளூர்
குடிநீர் திருடும் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் துணை போவதாகவும், இதே நிலை நீடித்தால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடையை மீறிச் செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், மஞ்சம்பாக்கம், செங்குன்றம், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் அரசு விதிமுறைகளை மீறி இராட்சத குழாய்களை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீர் விற்பனை செய்து வருகின்றன.
இதனால், குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் ஏராளமான மனுக்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, அம்பத்தூர் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த மாதம் காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்று, விதிகளை மீறி குடிநீர் விற்பனை செய்து வந்த நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கை மூலம் 21 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், செங்குன்றம் மேம்பாலம் புழல் ஏரி அருகே சீல் வைக்கப்பட்ட பிறகும், மறைமுகமாக குடிநீர் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், "இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குடிநீர் திருடும் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் துணை போவதாகவும், இதே நிலை நீடித்தால் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலகங்கள் முன் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனவும் பொதுமக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.