
திருச்சி
திருச்சியில், நடத்தாத பாடத்தை நடத்தியதாக கூறி கடிதம் கேட்டு மிரட்டும் தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், காட்டூரில் உருமு தனலட்சுமி என்ற தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் வேதியியல் துறை தலைவர் மாணவர்களுக்கு எதிராக செயல்பட்டு மாணவ -மாணவிகளின் இன்டர்னல் மதிப்பெண்களை குறைத்து மதிப்பீடு செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆங்கில சிறப்பு வகுப்புக்கு தனி கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.
அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்,
மாணவர்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவது ஏன்? நடத்தாத பாடத்தை நடத்தியதாக கூறி கடிதம் கேட்டு மிரட்டுவது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவுவாயிலின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி பாதுகாப்பிற்காக ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
இதனிடையில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து காவலாளர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவ, மாணவிகளுக்கு இன்டர்னல் மதிப்பெண்களை சரி செய்து தருவதாகவும், வேதியியல் துறை தலைவர் மீது கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடந்த மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மாணவர்களும் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.