
தேனி
பொட்டிப்புரம் பகுதியில் தனியார் நிலங்களில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ள வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் குப்பனாசாரிபட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், தேவாரம், பொட்டிப்புரம், புதுக்கோட்டை, இராசிங்காபுரம், மேலச்சொக்கநாதபுரம், சிலமலை ஆகிய பகுதிகளில் தனியார் பட்டா நிலங்களில் விதியை மீறி மணல் அள்ளப்பட்டு, லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், "பொட்டிப்புரம் பகுதியில் தனியார் நிலங்களில் மணல் குவாரி அமைத்து, லாரிகள் மூலம் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்" என்று பொட்டிப்புரம் அருகே உள்ள குப்பனாசாரிபட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "பொட்டிப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் நிலங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் விதியை மீறி எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளுவதால் பாசனக் கிணறுகள், குளங்கள் நீர்சுரப்பின்றி வறண்டு காணப்படுகின்றன.
மேலும், பொட்டிப்புரம் பகுதியில் அள்ளப்படும் மணல் நாள்தோறும் நூற்றுக் கணக்கான லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது. குறுகலான கிராமச் சாலைகள் வழியாக மணல் லாரிகள் அதிவேகமாக சென்று வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொட்டிப்புரம் பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்து கிராம மக்களையும், நீராதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், பொட்டிப்புரம் பகுதியில் மணல் அள்ளப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.