
நேற்று புழல் சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் ஜெயராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், சிறைக்கு வெளியே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், தண்டனைக் கைதிகள் 7 பேர் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். திடீரென தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ஜெயராஜ் (37) என்பவர் மட்டும் காணவில்லை.
கைதி ஜெயராஜை காணாததை அடுத்து, அதிர்ச்சி அடைந்த சிறைத்துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். கைதி ஜெயராஜ், தனது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனை அடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டினுள், கைதி ஜெயராஜ் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவரைச் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், ஜெயராஜை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.