
சிகரெட், செல்போன் கேட்டு கைதி ஒருவர் பொதுவெளியில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று போலீசாரை மிரட்டிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்போடு, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
கைதி ராஜசேகரன், போலீசார் உட்பட பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரிடம், ராஜசேகரன் சிகரெட் வாங்கித் தரும்படியும், செல்போனும் கேட்டுள்ளார்.
இவை இரண்டையும் தர போலீசார் மறுத்தனர். தொடர்ந்து போலீசரிடம் வற்புறுத்தி வந்த ராஜசேகரன், ஒரு கட்டத்தில் பேருந்து நிலையம் என்றுகூட பார்க்காமல், திடீரென ஆடை முழுவதையும் கழட்டிவிட்டு நிர்வாணமாக நின்று கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சிகரெட், செல்போன் கொடுக்கும் வரை ஆடை உடுத்த மாட்டேன் என்று ராஜசேகரன் போலீசாரை மிரட்டல் விடுத்த காரணத்தால், ராஜசேகர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்தில், கைதியின் இந்த அநாகரீக செயலைப் பார்த்தவர்கள் முகத்தை சுளித்தபடியே சென்றனர்.