உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 6ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பிறகு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. அப்படி வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள். ஒருவரை கொலை செய்ய நமக்கு உரிமை கிடையாது. அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது. தகுதி இல்லாதவர்கள் திறமை இல்லாதவர்கள் குடும்ப அரசியல் மூலம் எப்படி அமைச்சராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. சனாதனத்தை பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எந்த ஒரு வேலையும் செய்யாமல் மைக்கில் பேசுவதை பார்த்து மக்கள் வருகிறார்கள். உதயநிதி பேச்சை நிறுத்தவே கூடாது. அதன் விளைவை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பீர்கள்.” என்றார்.
சனாதன தர்மத்தை திமுக எதிர்ப்பதால், தமிழகத்தில் பாஜக தொடர்ந்து வளரும் என்ற அண்ணாமலை, “முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது நடக்கவில்லை. தற்போது தமிழகத்தில் ஒரு தவறான சூழல் உருவாகியுள்ளது. அரசியலைப் பொறுத்த வரையில் எப்பொழுதெல்லாம் தவறு நடக்கிறதோ அப்போதெல்லாம் புதிய கட்சிக்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் திமுக எங்களுக்கான கதவை திறந்து விட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு சித்தாந்த அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின்தான் முக்கிய காரணம். உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி மிகவும் அதிகம்.” என்றார்.
நீ விளையாடு நண்பா: உதயநிதிக்கு ஃபையர் விட்ட அன்பில் மகேஷ்!
மேலும், “இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒரே வார்த்தை தான். இந்தியாவுக்கு புதிதாக எந்த பெயரும் வைக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரத் என்ற பெயர் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதம் என்ற வார்த்தை நம்ம கலாசாரத்தை மிகவும் ஆழமாக, தெளிவாக காட்டுக்கிறது.” என்றும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார்.
முன்னதாக, டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் என கூறிக் கொள்ளும் பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர், உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், உதயநிதியின் படத்தை கத்தியால் வெட்டிய அவர், புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.