நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறை ஆட்சியில் உள்ள பாஜக, இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி சற்று வலுவிழந்து உள்ளது. அக்கூட்டணியில் இருந்து அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெளியேறி விட்டன. இதில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே, பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் மற்றும் இதர கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண பாஜக முயற்சித்து வருகிறது.
undefined
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க பிரேமலதாவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “தேமுதிக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். கேப்டன் இறப்பு மூலம் இது அனுதாபம் ஓட்டு என்று நினைக்காதீர்கள், அனைவரும் நல்ல தலைவரை இழந்து இருக்கிறோம். 14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சி உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.” என்றார்.
தேர்தல் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ நேரடியாகவோ இதுவரை யாரிடமும் பேசவில்லை எனவும், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கோரிக்கையாக இருக்கிறது எனவும் மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜயகாந்த் உடல் நலிவுறத் தொடங்கியபோதே அக்கட்சியும் நலிவடையத் தொடங்கி விட்டது. வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்து விட்டது. எனவே, மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டுள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், 14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சி உடன் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பாஜக கூட்டணியில் இணைய பிரேமலதா விஜயகாந்த் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலை விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கவுள்ளது. விஜயகாந்த் இல்லாமல் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தலும் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.