ரயில் மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது கண்டுபிடிப்பு ..பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

By Thanalakshmi VFirst Published Nov 27, 2021, 6:55 PM IST
Highlights

கோவையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று , ரயில் மோதி உயிரிழந்த நிலையில், அதன் பிரேத பரிசோதனையில் அந்த பெண்யானை கருவுற்று இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ரயில் ஓட்டி வந்த ஓட்டுநரிடம் இரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

வன உயிரினங்களில் யானைகள் கம்பீரமானவை. மிடுக்கானவை. உருவம் , தும்பிக்கை, தந்தம் என தன்னுள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இருந்தபோதிலும், அதனை பாதுக்காப்பது இக்காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், யானைகளின் இறப்பு விகிதம், ஒவ்வொரு வருடமும் ஏறுமுகமாக உள்ளது. தனது வலசை தொலைத்த யானைகள், மின்வேலிகளிலும் தண்டவாளங்களிலும் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் கேரளாவிலிருந்து கோவை வனப்பகுதியை நோக்கி 25 வயது பெண் காட்டு யானை, இரண்டு பெண் குட்டி யானைகளுடன் வந்துள்ளது. மூன்று யானைகளும் நவக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வழியாக சென்னை செல்லும், சென்னை மெயில் விரைவு ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது மோதியது. இதில்  2 குட்டிகள் உட்பட 3 யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் விபத்து குறித்து உடனடியாக பாலக்காடு ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதே போல், மதுக்கரை வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த மூன்று யானைகளுக்கும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உயிரிழந்த 25 வயது மதிக்கதக்க பெண் யானை,15 வயது மற்றும் 16 வயதான குட்டியானைகள் என மூன்று யானைகள் உடல்களுக்கும் அருகில் உள்ள வனப்பகுதியில் பிரதே பரிசோதனை நடைபெற்றது.

தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் ,உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

முன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வாளையார் மதுக்கரை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 யானைகள் அடிபட்டுள்ளன. இரண்டு குட்டி யானைகள் 30 மீட்டர் தூரத்திலும், 140 மீட்டர் தூரம் தள்ளி பெண் யானையும் இறந்து கிடந்தன என்று கூறினார். மேலும் இரண்டு ரயில் பாதைகளில்  "ஏ" பாதையில்  ரயில் போக்குவரத்து எப்போதும்  குறைவாக இருக்கும். இந்தப் பாதையில் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெற்றுள்ளது என்று தெரிவித்த அவர், வனத்துறை -ரயில்வே துறை உடன்பாட்டின் படி ரயில் இயக்கப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகின்றது என்றார். மேலும் கூறிய அவர், ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்தும், எப்படி யானை இறந்தது என்பது குறித்தும் ரயில் ஓட்டுனர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் நிச்சயம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில்தான் அதிகப்படியான  விபத்துகள் நடக்கின்றது. ஏற்கனவே "பி " ரயில் பாதையில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.

பரந்த காடுகளில் வாழ்ந்த யானைகளுக்கு வலசை பாதை நீளமானது. எனவே அதன் போக்கில் யானைகள்செல்லும் போது, மனிதர்களாகி நாம் வனத்தை ஆக்கிரமித்து குறுக்கிட்டு கட்டிய கட்டிடங்களும் ரிசார்டுகளும் தண்டவாளங்களும் யானைகளின் உயிரிழப்பு முக்கிய காரணங்களாக அமைக்கின்றன என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இரயில் மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது எனும் தகவலையடுத்து இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!