
சென்னை அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதாப் ரெட்டி மீது கிரிமினல் வழக்குபதிவு செய்ய வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என கூறி முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் அனுமதிக்கபட்டார்.
அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகள் அளித்து வந்தனர். மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே குழுவும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தது.
75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்தவ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்த ஒ.பி.எஸ் மக்களின் சந்தேகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் வளரும் சமூக வழக்கறிஞர்கள் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
ஆனால் அவர் இறந்துதான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது மக்களை ஏமாற்றும் செயல். எனவே அப்பல்லோ இயக்குனர் பிரதாப் ரெட்டி உள்பட ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் தகவல்களை வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு உண்மை நிலையை அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.