
இந்தியா ஒரு வலிமையான நாடாக உருவாகியுள்ளது என்றும் அதற்கு விமானப் படையின் பங்கு அளப்பரியது என்றும் சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கு சிறந்த சேவை ஆற்றும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், போர்க்கால பயிற்சி பெறுவதிலும் சிறப்பாக விளங்கக்கூடிய படை பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள விமான படை தளத்துக்கு இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
.இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக பிரணாப் முகர்ஜி நேற்ற சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த வண்ணமிகு விழாவில் இன்று காலை குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அப்போது, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரணாப் முகர்ஜி.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்தியா ஒரு வலிமையான நாடாக உருவாகியுள்ளது என்றும் அதற்கு விமானப் படையின் பங்கு அளப்பரியது என்றும் பாராட்டினார்.
இந்திய விமானப்படை தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும், . நாட்டிற்காக அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் வீரர்களை போற்றும் நிகழ்ச்சி இது என்றும் இந்திய ராணுவப்படைகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
இவ்விழாவில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பின்னர் இயந்திரவியல் பயிற்சி மையத்திற்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பிரணாப் பார்த்து ரசித்தார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்