
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்திருந்தை கண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவலாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும், அதன் பக்கவாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகின்றன. 14 மாணவியர் உள்பட 40 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தையொட்டி, குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்ட விநியோகக் குழாயுடன் இணைக்கப்பட்டு, தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலையில் மாணவர்கள் வருகைக்கு முன்பே வழக்கம்போல் பள்ளி வளாக துப்புரவுப் பணிக்குச் சென்றுள்ளார் பணியாளர் நாகம்மாள். பணிகளை முடித்துக்கொண்டு, தண்ணீர் பிடிப்பதற்காக குடிநீர்த் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு குழாயை திறந்தபோது, தண்ணீரில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வந்து பார்த்து, காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில், கரியாப்பட்டினம் காவல் நிலைய காவலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அரை லிட்டர் அளவுள்ள களைக்கொல்லி விஷம் குடிநீரில் கலந்திருப்பதையும், மர்ம நபர்களால் வீசப்பட்ட அதன் புட்டியையும் கைப்பற்றினர்.
இந்தச் சம்பவம் மக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.