மக்களின் பணத்தில் சொகுசாக இருப்பதே போக்குவரத்து கழகத்தினர்தான் - மதுரை நீதிபதிகள் கடும் கோபம்...

 
Published : Jan 26, 2018, 10:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
மக்களின் பணத்தில் சொகுசாக இருப்பதே போக்குவரத்து கழகத்தினர்தான் - மதுரை நீதிபதிகள்  கடும் கோபம்...

சுருக்கம்

The Transport Corporation is the luxury of people money - Madurai judges are furious ...

மதுரை

ஒரே வழக்குக்கு பலமுறை உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து டெல்லிவரை சொகுசு பயணம் செய்து மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குவதே போக்குவரத்துக் கழக மேலாண்மைதான் என்று போக்குவரத்து மேலாண்மைக்கு எதிரான வழக்கு ஒன்றில் மதுரை நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்களின் கணக்கில் கூடுதலாக தொகை செலுத்தியதாகவும், அந்தத் தொகையை பிடித்தம் செய்யப் போவதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், சிலரின் கணக்கில் பணம் பிடித்தமும் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து போக்குவரத்துக்கழகம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. ஆனால், இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு வழக்கில் மீண்டும் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

மக்களின் பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராக உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 23-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் டி.வி.இளங்கோவன் ஆஜராகி, ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததற்கு வருத்தம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், “போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அவற்றை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அடிக்கடி வருகின்றனர். இதனால் மக்களின் பணமும், ஊழியர்களின் பணி நேரமும் வீணாகிறது.

மேல்முறையீட்டு வழக்குகளுக்காக அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். இதற்காக அவர்கள் சொகுசு பயணம் மேற்கொள்கிறார்கள். பல்வேறு நீதிமன்றங்களில் போக்குவரத்துக்கழகங்கள் 7500 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்காக அரசு பணத்தை போக்குவரத்து அதிகாரிகள் வீணாக செலவு செய்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளும் அதிகாரிகள், போக்குவரத்துக்கழகம் நட்டத்தில் இயங்குகிறது என்கின்றனர். இவை அனைத்துமே தவறு.

ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று போராடுகின்றனர். சம்பளத்தை உயர்த்திவிட்டு, பேருந்து கட்டணத்தை அதிகரித்தால் அதே நபர்கள் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்று நீதிபதிகள் கடும் கோபத்துடன் தெரிவித்தனர்.

அதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, "சட்டத்தை தவறாக பயன்படுத்தி தேவையில்லாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை டெல்லியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்டு விதவையானவர்கள் சங்கத்துக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கின் எதிர் மனுதாரர்களிடம் பிடித்தம் செய்த தொகையை எட்டு வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டும்" என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டு அசத்தினர்.

 

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!