அத்துமீறும் காவலர்களுக்கு எச்சரிக்கை...! மக்கள் பொங்கி எழுந்தால் தாங்காது...!  பதவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு போலீஸ் கமிஷனரின் அதிரடி...! 

First Published Jan 26, 2018, 9:17 AM IST
Highlights
Police commissioners action to the person who abused the post


நாட்டில் இருக்கும் மிக கடுமையான வேலைகளில் ஒன்று போலீஸ் பணி. இது முதலில் மக்களுக்கு சேவையாற்றவும், வன்முறைகளை தடுக்கவும், குற்றத்தை தவிர்க்கவும் கொண்டுவரப்பட்டது. 

திரைப்படங்களில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மக்கள் மத்தியில் அவர்தான் கிங். இதை பார்த்து வளரும் குழந்தைகளும் சிறுவர்களும் கூட பெரிய ஆளாக வந்தால் என்னாவாகுவாய் என கேட்கும்போது போலீஸ் ஆவேன் என்பது தான் பெரும்பாலானோருடைய பதிலாக இருந்தது. 

ஆனால் தற்போது நிலை அப்படியே தலைகீழாக மாறி போய் உள்ளது. காரணம் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே இருந்த நட்புணர்வு குறைந்து போனதுதான். 

முன்பெல்லாம் தப்பு செய்தவர்கள் மட்டுமே போலீஸ் அதிகாரியை பார்த்து பயப்படுவார்கள். தற்போது போலீஸ் என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் புடுங்குவார்கள் என மக்கள் நினைக்கும் அளவுக்கு காவல்துறையின் நிலை உள்ளது. 

இதில் சில போலீசார் நேர்மையாகவும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கும் மக்கள் புகழ்ந்து தள்ளி பாராட்டுகளை குவிக்கத்தான் செய்கின்றனர். 

யாரையெல்லாம் நேரடியாக தட்டி கேட்க முடியவில்லையோ அவர்களை தங்கள் இயலாமையால் சமூகவலைதளங்களில் கரித்து கொட்டி தீர்க்கின்றனர் பொதுமக்கள்.

ஹெல்மெட் அணியாமல் போனால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை தான், ஆனால் நிற்காமல் போவோரை அடித்து மண்டை உடைக்கலாமா? வேகமாக போவோரை மடக்குகிறேன் என நினைத்து பிரேக் பிடிக்க வைத்து விபத்துகளை ஏற்படுத்தலாமா? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்புகின்றன. 

அதேபோல் போக்குவரத்து போலீசாருக்கு நேரம்போதவில்லை என்றால் அவர்கள் துணைக்கு பொதுமக்களை பிடித்து வைத்து அறுவை போடும் சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெற்றுதான் கொண்டிருக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பத்தூர் பாடி சாலையில், காலையில் ஜன சந்தடி மிக்க இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை திடீரென மடக்க அவர் திடீர் பிரேக் போட்டதில் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.

இதே போல் விருகம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கிப் பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சாலைத் தடுப்பில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு முன்பு பைக்கில் வந்த இளைஞர் நிற்கவில்லை என்று போலீஸார் தடியால் தலையில் அடித்ததில் பைக்கில் ஓட்டி வந்த இளைஞர் தலையில் பலத்த அடிபட்டு ரத்தமாய் ஊற்றியது. 

சில நாட்களுக்கு முன் மேடவாக்கத்தில் வாலிபர் ஒருவரை போலீஸார் தாக்கியதில் அவர் போலீஸாரிடம் எப்படி என்னை அடிக்கலாம் என இளைஞர் ஆவேசமாக கேட்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது.

மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் பெரியவர்கள் சிறியவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் ஒருமையில் திட்டுவதும், ஆபாசமாக பேசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் வார்த்தைகளையும் அடிகளையும் தாங்க முடியாமல் மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். 

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் தாமரை செல்வனை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என காவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் இதுபோன்ற போலீசாரின் செயல்பாடுகள் மாறுவதிற்கில்லை. இதற்கெல்லாம் காரணம் போலீஸ் மேலிடம் கொடுக்கும் டார்ச்சரே இவ்வாறு கீழே வேலை பார்க்கும் அதிகாரிக்களுக்கு இறுக்கத்தை ஏற்படுத்துவதாக அதே கீழ்தரப்பு போலீஸ் வட்டாரங்கள் குற்றம் கூறுகின்றனர். 

இதற்கான காரண கர்த்தாவை கண்டறிந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தாவிட்டால் பிற்காலத்தில் போலீஸ் யாரு பொதுமக்கள் யாரு என வித்தியாசம் தெரியாத நிலை உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை. 

அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்காமல் இருக்க அதற்கான நிரந்த தீர்வை காவல்துறையும் அதிகார வர்க்கமும் கண்டறிந்து நேர்மையுடன் செயல்படவேண்டும். 

click me!