
கிருஷ்ணகிரி
குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி கர்நாடகாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக அரசு பேருந்துகள் எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. மேலும், எல்லையில் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
கர்நாடக மாநில மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மகதாயி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேளும், மகதாயி நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு அந்த அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த முழு அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் கர்நாடகாவின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் நேற்று இயக்கப்படாமல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.
இதேபோல கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு பல்வேறு பணிகள் காரணமாக செல்லக் கூடிய தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுமஸ்பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும், ஓசூர் பேருந்து நிலையத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் நிற்கும் இடமும் வெறிச்சோடியே காணப்பட்டது. ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லக்கூடிய லாரிகளும், ஓசூரில் ரிங் ரோடு, ஜூஜூவாடி மற்றும் மாநில எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டன.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை முன்னிட்டு ஓசூர் அருகே ஜூஜூவாடியில் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தகக்து.