கரூரில் இந்தாண்டு மட்டும் 6472 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு. ஆனால் ஆட்சியருக்கு இது போதாதாம்...

 
Published : Jan 26, 2018, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
கரூரில் இந்தாண்டு மட்டும் 6472 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு. ஆனால் ஆட்சியருக்கு இது போதாதாம்...

சுருக்கம்

Only 6472 new voters in Karur this year. But its not enough for the collector...

கரூர்

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6,472 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பெருமிதத்தோடு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டுவதே இலக்கு என்றார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று 8-வது தேசிய வாக்காளர் நாள் விழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

ஆட்சியர் தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் நான்கு தலைமுறை வாக்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாந்தோணி அரசு கலைக் கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கல்லூரி மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிறைவாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த விழாவில் ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது: "கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி என்பது இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளாகும். இந்த நாளை தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாளாக கொண்டாடி வருகிறோம்.

இந்த தேசிய வாக்காளர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு “அணுக தகுந்த தேர்தல்” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வாக்கின் முக்கியத்துவம்,

வாக்களிப்பதன் அவசியம், நம் சுதந்திரம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுவதால் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வருகிறது.

நூறு சதவீதம் வாக்குப் பதிவை நடத்துவதற்கு கல்லூரிகளில் வளாக தூதுவர்கள் நியமிக்கப்பட்டு 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இணையதளம் மூலம் எப்போது வேண்டுமானாலும் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

வாக்களிப்பதன் அவசியத்தை நாம் உணர்ந்து செயல்படுவதுடன் நமது பணியாளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல பக்கத்து வீட்டார், உற்றார் உறவினர்களையும் வாக்களிக்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6,472 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய வாக்காளர் நாளையொட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட வினாடி- வினா போட்டியில் கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்து தேசிய அளவில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றது.

சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!