
மக்களுக்கு பணி செய்யும், உன்னதமான காவல் பணியில் வந்த தங்களை ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதும், 24 மணி நேரம், வேலை வாங்குவதும், எப்படி சரியாக இருக்கும் என்று பல கோரிக்கைகளை வைத்து, போலீசார் சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்ந்த துறையில் கட்டுப்பாடு மிகுந்தது காவல் துறை. மற்ற மாநிலங்களில், காவல் துறைக்கு சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டாலும் தமிழத்ததில் மட்டும் காவல் துறைக்கு சங்கம் வைத்துக்கொள்ள இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கே சங்கம் உள்ள நிலையில், எந்தவித பாதுகாப்பும் இன்றி செயல்படும் போலீசாருக்கு சங்கம் இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது.
காவல் துறைக்கு, பல கனவுகளுடன் வரும் இளைஞர்கள், பணியில் இணைந்த பிறகு, தாங்கள் சந்திக்கும், அவமானங்களை எங்கு முறையிடுவது என்று தெரியாமல் மனவுளைச்சலுடன் வாழும் நிலை ஏற்படுகிறது.
நேர்மையாக பணியை பார்க்கும்போது, அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபல மனிதர்கள் உள்ளிட்டோரால் ஏற்படும் அவமானம் சில இடங்களில் நேர்மையாக நடந்தும், மேலதிகாரியின் அறிவுறுத்தல் காரணமாக, தவறுக்கு துணைபோகின்ற காரணங்களால் மனம் வெதும்பி போகின்றனர்.
காக்கி சட்டையைப் போட்டு, விரைப்பாக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடலாம் என்று வரும் இளைஞர்கள், ஐ.பி.எஸ்.
அதிகாரிகள் வீட்டில் நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்வதும், காய்கறி வாங்குவதும், துணி துவைக்கவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் பணிக்கு அனுப்பப்படும்போது, மிகவும் நொந்து போகின்றனர்.
பணியில் உள்ள ஐ.பி.எஸ்.-களுக்கு மட்டுமல்ல ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் இதுபோன்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலையால், மனம் வெதும்பி பணி செய்கின்றனர்.
10-வது படித்து, பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவர் வாங்கும் சம்பளமும், அதே அளவிற்கு பணியாற்றும் காவலருடைய சம்பளத்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அரசு ஊழியர் 8 மணி நேரம் பணி, வார விடுமுறை என ஹாயாக வேலை பார்க்க..., அதைவிட குறைந்த சம்பளம் வாங்கும் காவலர் 12 முதல் 16 மணி நேரம் பணி, வார விடுமுறை இல்லாத நிலை என பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம், முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கில் ஓய்வு பெறும் காவலர்கள் மற்றும் புதிய காவலர்களில் தேர்வு செய்யாத நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பணிச்சுமையை தற்போதுள்ள காவலர்கள் சுமக்க வேண்டியுள்ளது.
தங்களது குறைகளை எடுத்துச்சொல்ல மேலதிகாரியை ஒரு காவலர் சாதாரணமாக பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் மன உளைச்சலில் பலர் தற்கொலை முடிவை நாடி உள்ளனர். காவலர்களுக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கேட்ட சில காவலர்கள், பைத்தியக்கார பட்டம் சூட்டப்பட்டு, பணியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வரலாறு எல்லாம் உண்டு. ஆனால், மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியில் காவலர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் நவீன விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது, சட்டமன்றம் நடந்து வரும் சூழ்நிலையில், காவலர்களுக்கான மானியக்கோரிக்கையில், தங்களது தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று வாட்ஸ்அப், வலைதளங்களில் தங்கள் கோரிக்கையை வெளியிட்டு வந்த இளம் காவலர்கள் தற்போது பகிரங்கமாக போஸ்டர் அடித்து தங்கள் கோரிக்கையை சென்னை முழுதும் ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் கோரிக்கையை தெரிவிக்க உள்ளதாக அந்த போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது.