
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைவது என்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரி மதுரை பழைய மகாளிபட்டியை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 15 தென் மாவட்டங்களுக்கு மையபகுதியாக விளங்கும் மதுரையில் உயர்தர மருத்துவ வசதி குறைவாக உள்ளதால் இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் தமிழகத்தில பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்த வழக்கில் மத்திய அரசு ஜூலை 12 க்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைவது என்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.