
திருநெல்வேலி
ஊதிய உயர்வு கேட்டு தபால் ஊழியர்கள் பதினோறாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
அனைத்து இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க கூட்டு போராட்ட குழு சார்பில், கடந்த 22-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
"கிராமப்புற தபால் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
தபால் ஊழியர்கள் குழந்தைகளின் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்க வேண்டும்.
காப்பீட்டு திட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது.
நேற்று 11-வது நாளாக தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்ததால் கிராமப்புற தபால் அலுவலகங்களில் தபால்கள் தேங்கின. தபால் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
போராட்டத்தின் பதினோறாவது நாளில் அனைத்து இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்ட குழுவினர் நேற்று பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க கோட்ட தலைவர்கள் அய்யப்பன், ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பாட்ஷா முன்னிலை வகித்தார்.
கோட்ட செயலாளர் ஜேக்கப் ராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சங்க நிர்வாகிகள் ஞான பாலசிங், நம்பி, காசிவிசுவநாதன், நடராஜன், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.