
புற்றுநோயால் இறந்த தாயின் இறுதி சடங்குக்கு இரண்டு சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் கண்கலங்க செய்துள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் விஜயாவிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் திடீரென இறந்து போனார்.
கணவன் இறங்கதர்க்குப் பிறகு கூலி வேலை செய்து தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். நாளுக்கு நாள் அவர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தினமும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்துள்ளனர், இந்நிலையில் அவருக்கு திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்பக புற்று நோய் ஏற்பட்டது.
வாழ்க்கையில் இடி விழுந்தது போல் விஜயா நிலை குலைந்தார். எனது குழந்தைகளை எப்படி நான் காப்பாற்றுவேன்? வேலைக்கு எப்படி செல்வேன்? என தினம் தினம் கண்ணீருடன் வாந்துவந்துள்ளார். ஆனாலும் குழந்தைகளை படிக்க வைக்க வசதி இல்லாததால் தனது மகள் காளீஸ்வரியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டார். 2 மகன்களையும் வேலைக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே விஜயாவுக்கு புற்று நோய் நாளுக்கு நாள் முற்றிப் போனது. புற்றுநோயின் கொடுமையால் அவர் படுத்த படுக்கையானார்.
தாயின் நிலையை கண்ட 2 சிறுவர்களும் செய்வதறியாமல் திகைத்துப்போனார்கள். உறவினர்களிடம் தனது அம்மாவை காப்பாற்றுங்கள் என்று பணம் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் எந்த உதவியுமே செய்யவில்லையாம். 2 சிறுவர்களும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்துள்ளார்.
தாயின் மரணத்தால், கலங்கிப்போன சிவர்கள் கதறி அழுதனர். இவர்களில் கதறலைக் கண்ட வார்டுகளில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் திரண்டனர். அடுத்து என்ன செய்வது என்று கைகளை பிசைந்தபடி நிலை குலைந்து நின்றார்கள். அப்போது ஒரு சிலர் யாராவது உங்களுக்கு சொந்தக்காரர்கள் இருந்தால் நீங்கள் தெரிவியுங்கள் என்று கூறினார். உடனே அந்த சிறுவர்கள் அங்கிருந்தவர்களின் செல்போன்களை வாங்கி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை.
இதனால் கண்ணீர் வடித்த 2 சிறுவர்களும் தனது தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரி வார்டுகளில் இருந்த நோயாளிகளின் உறவினர்களிடம் தாயின் இறுதிச் சடங்கிற்காக பிச்சை எடுப்பது என முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனையில் இருந்தவர்களிடம் 2 சிறுவர்களும் கண்ணீர் மல்க எங்கள் அம்மாவை அடக்கம் செய்ய வேண்டும். கொஞ்சம் பணம் இருந்தால் கொடுங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக பிச்சை எடுத்துள்ளனர்.
மனம் இறங்கிய பலர் அந்த சிறுவர்களுக்கு தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர். தகவல் அறிந்த ஆஸ்பத்திரி நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் நேரில் வந்து அவரும் சிறுவர்களுக்கு உதவியுள்ளார். அதன் பின்னர் அவரது உத்தரவின் பேரில் விஜயாவின் உடல் திண்டுக்கல் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.