உணவுப் பொருள்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இல்லென்னா கடும் அபராதம் - ஆட்சியர் எச்சரிக்கை...

 
Published : Feb 08, 2018, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
உணவுப் பொருள்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இல்லென்னா கடும் அபராதம் - ஆட்சியர் எச்சரிக்கை...

சுருக்கம்

Fine penalties for food without production and expiration date - Collector

விருதுநகர்

உணவுப் பொருள்கள் இருக்கும் பொட்டலங்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி தெளிவாக குறிப்பிடாமலோ, தவறுகள் இருந்தாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என்று விருதுநகர் ஆட்சியர் அ.சிவஞானம் எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் உணவு வணிகர்களுக்கான உரிமம், பதிவு தொடர்பான வழிகாட்டுதல் குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்து பேசினார். அதில், "உணவின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து மக்கள், மாணவர்களிடையே உரிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

எந்த ஒரு உணவு மற்றும் உணவுப் பொருள்களையும் உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலின்போது, பாதுகாப்பான தரமான முறையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை வணிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தி செய்பவர்கள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தாங்கள் உற்பத்தி செய்யும் இடத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தயாரிக்கும் அனைத்துப் பொருள்களிலும் முழுமையாக அதாவது உற்பத்தி தேதி, காலாவதி தேதி போன்றவற்றை மக்கள் நன்கு அறியும் வகையில் பொட்டலங்களில் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். இவற்றில் தவறுகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மூலம் உணவுப் பொருள்கள் கையாளும் நிறுவனங்களுக்கு உரிமம் பதிவுச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

மளிகைக் கடை, பெட்டிக்கடை, குளிர்பானங்கள், பால் பொருள்கள், இறைச்சிக் கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் விநியோகிப்பவர்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள், இனிப்பு பலகாரக் கடைகள்,

பேக்கிரி நிறுவனங்கள், பழக்கடைகள், பழ வண்டிகள், திருமண மண்டபங்கள், சில்லறை விற்பனையாளர்கள், நடமாடும் தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவுப் பாதுகாப்பு துறையில் உரிமம் பதிவுச் சான்று பெற வேண்டும்.

மேலும், அரசு மூலம் நடத்தப்படும் சாராயக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், கருணை இல்லங்கள், அன்னதான மையங்கள், அரசு விடுதிகள் போன்ற உணவு விற்பனை மற்றும் கையாளும் நிறுவனங்கள் உரிமம் பதிவு சான்று பெற வேண்டும்.

ஆண்டு வர்த்தகம் ரூ.12 இலட்சத்திற்கு குறைவாக விற்றுக் கொள்முதல் செய்வோர் பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டு வர்த்தகம் ரூ.12 இலட்சத்திற்கு அதிகமாக கொள்முதல் செய்வோர் உரிம கட்டணமாக ரூ.2000 மற்றும் தயாரிப்பாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற வகையில் உரிய கட்டணமும், உரிய ஆவணங்களும் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 58 உணவு வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். 45 வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் ரூ. 25.37 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!